March 9, 2018
தண்டோரா குழு
தமிழக அரசு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தாரதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், 21 வழிமுறைகளையும் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் 21 உத்தரவுகளில் எந்தெந்த உத்தரவுகளை செயல்படுத்த முடியும் என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து அறிக்கையை பார்த்த நீதிபதி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை கடத்தலை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? மேடை அலங்காரத்திற்கு பல கோடி செலவு செய்யும் அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகள் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், உத்தரவுகளை செயல்படுத்தாவிட்டால், தலைமை செயலரை தலைமை செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுவோம். மேலும், அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் நீதிமன்றம் உற்றுநோக்கி வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இதுவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இயங்கி வருவதை சுட்டிக் காட்டிய நீதிபதி 8 மாதங்கள் ஆகியும் நீதிமன்ற வழிமுறைகள் ஒன்றைக் கூட அரசு அமல்படுத்தவில்லை என்றார்.
இதனையடுத்து 21 உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பாக அரசு பதிலளிக்க இறுதி கெடு அளித்து வழக்கை மார்ச் 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.