January 2, 2021
தண்டோரா குழு
கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும், நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.
சிறுவாணி அணை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 45 அடி வரை உயர்ந்தது. இதனிடையே தற்போது மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி சார்பாக அணையிலிருந்து தற்போது 88 எம்.எல்.டி நீர் மட்டுமே குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.