July 11, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டியதால் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கன மழை பெய்து வந்ததை அடுத்து,சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டி உள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு 114 எம்.எல்.டி நீர் வினியோகம் செய்து வரும் நிலையில்,அணை நிரம்பியதை அடுத்து கூடுதல் நீர் வினியோகம் செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.