June 21, 2021
தண்டோரா குழு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் கடிதம் அனுப்பபட்டது.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவும் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு,குறு தொழில்கள் அனைத்தும் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்த்தோம். பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் ஊரடங்கு காலம் முழுவதும் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில் சிறு,குறு தொழில்கள் மட்டும் முடக்கப்படுவது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
பெரும்பாலான குறு,சிறு தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வாடகை, வட்டி, மின் கட்டணம், கடன் தவணைகள் அனைத்தையும் செலுத்தியாக வேண்டும். தொழில் இயங்க முடியாத நிலையில் மேற்படி செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறோம்.
எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு காலத்திலும் தொழில்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. தற்போது டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொழில்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன.கோவையில் மட்டும் சிறு,குறு தொழில்கள் முடக்கப்படுவதால் நாங்கள் சந்தையை இழப்பது அதிகரிக்கும்.தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கும்.
சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் மேலும் 10 சதவீதம் அளவுக்கு கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் இதற்காக ரூ.46 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. புள்ளி விவரங்களின்படி ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அனைவரும் புதிய கடன் பெற முடியும். இதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அத்யாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் சில தொழில்கள் ஊரடங்கின்போது செயல்பட
அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு கருவிகள், இடுபொருட்கள் வழங்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அனுமதி உள்ள சில சிறு,குறு தொழில்களும் இயங்க முடியாமல் உள்ளன.
ஊரடங்கினால் எஃகு, வார்ப்பட இரும்பு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்கள் அனைத்தும் விற்கப்படவில்லை. சரக்குகள் வணிக வளாகங்களில் தேங்கி கிடக்கின்றன. ஆனால் டிமாண்ட் எதுவும் இல்லாதபோதும் மூலப்பொருட்களின் விலை மட்டும் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே எங்களது துயரங்களை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சிறு,குறு தொழில்கள் அனைத்தும் 50 சதவீதம் பணியாளர்களுடன் உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும். தொடர்ந்து 49 நாட்களாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் குறைந்தது 2 மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.