January 25, 2021
தண்டோரா குழு
சிறப்பாக பணிபுரிந்த
வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு
சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த 23 வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், 4 மேற்பார்வையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.
இதனை தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் புதிய வாக்காளர்கள் ஆகியோர் வாக்காளர் தின உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:
இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி ‘தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும், மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து, கேடயங்களையும் மாவட்ட கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.