June 30, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீசை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது,காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அந்த வீடியோவில் காவல்துறை சீருடை அணிந்திருந்த அவர் காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருக்கிறது.துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை திட்டமிட்டு நடந்துள்ளது. இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது என பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைனையடுத்து வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்து,குன்னுாரில் கைது செய்தனர்.சைதாபேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலானியை ஜூலை, 5 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே,நிலானிக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்தார்.இந்நிலையில் நேற்று,இம்மனுவை விசாரித்த நீதிபதி நிலானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.