June 21, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போலீஸ் உடையில் போலீசை விமர்சித்த சின்னத்திரை நடிகை நிலானிக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்படுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது போலீசாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து,காவல்துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சின்னத்திரை நடிகை நிலானி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் காவல்துறை சீருடை அணிந்திருந்த அவர் காவல் துறை சீருடையை அணிந்திருப்பது கேவலமாக இருக்கிறது.துப்பாக்கிச் சூடு தற்செயலானது இல்லை திட்டமிட்டு நடந்துள்ளது.இலங்கையில் நடந்தது தற்போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது என பேசியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைனையடுத்து ஆள்மாறாட்டம்,காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல்,வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல்,தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கடந்த 24ம் தேதி வடபழனி போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில்,சின்னத்திரை நடிகை நிலானியை குன்னூரில் நேற்று வடபழனி போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து,சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் நிலானி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,நிலானியை ஜூலை 5 வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே,நிலானிக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனு, வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.