January 20, 2021
கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாக குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா கார்த்திக் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில் கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை கருதி அங்கு புதிய வீடுகளை கட்டித் தர வேண்டி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி குடியிருப்புவாசிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவை திமுக தன்னிச்சையாக எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்பை புதுப்பித்து தர தாங்கள் விடுத்த கோரிக்கையை அமைச்சரும் அரசுத்துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டு துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ள நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் என்பது அரசியல் செய்வதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.