June 22, 2021
தண்டோரா குழு
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16-வது தமிழக சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் சட்டப்பேரவை சபாநாயகர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமானது பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,
ஆளுநர் உரை மீது விவாதம் நடப்பதால் நடப்பு சட்டமன்ற தொடரில் வேளாண்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாது.
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்.அதைப்போல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.