May 22, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் மாநகராட்சி மின் மயானம், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் எரிவாயு தகன மேடை ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கே.கே.புதூர், சாய்பாபா காலனி, அழகண்ணன் 5வது வீதியில் செயல்பட்டு வந்த பேக்கரிகள், மளிகை கடை, காய்கறிக்கடை, இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்திட வேண்டும் என அவர் அறிவுரை கூறினார்.
பின்னர் சாய்பாபா காலனியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீ கடையை மூட உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ராமலிங்கம் காலனி மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி கமிஷனர்
பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் ராஜா, மண்டல உதவி கமிஷனர்கள் மகேஸ்கனகராஜ் (வடக்கு), சுந்தர்ராஜ் (மேற்கு), சிவசுப்பிரமணியம் (மத்தியம்)
மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.