March 24, 2021
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் கசடு கழிவு மற்றும் நச்சுத்தொட்டி அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி, புது டெல்லி தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம்,தேசிய தூய்மைப்பணியாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன்,நேர்டு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் கசடு கழிவு அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியானது இரண்டு நாட்களுக்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறுகின்றது.
நேற்று நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியினை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளிலுள்ள மாநகராட்சி மற்றும் தனியார் கழிவுநீர் வாகனங்களில் பணிபுரியும் பணியாளர்களை கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடை, நச்சுத்தொட்டி ஆகிய பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.இயந்திரங்களை கொண்டுதான் பயன்படுத்த வேண்டும்.
மேலும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டி பணிகளின் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்கும் வண்ணம் இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும்போது, கிளவுஸ், மாஸ்க், ஹெல்மெட் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனிதர்கள் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி, நச்சுத்தொட்டிகளில் இறங்கக் கூடாது.இப்பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிந்து பணிபுரிய வேண்டும். இதற்கு என பிரத்யேக தொலைபேசி எண் 0422-14420 மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பின்னர் மாநகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அவர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மரபுசாரா எரிசக்தி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம், நேர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் காமராஜ், மாநகர பொறியாளர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.