December 4, 2025
தண்டோரா குழு
சூயஸ் நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள ஜெயம் சிறப்புப் பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளி கடந்த பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசால் லாப நோக்கமற்ற பள்ளியாக அங்கீகரிக்கப்பட்ட இப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரத்தை வளர்க்கும் வகையில் சிறப்பான முறையில் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர், அவர்களின் ஆற்றலும் ஈடுபாடும் இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன.கோயம்புத்தூரில் 24×7 தண்ணீர் வழங்கல் திட்டத்தின் திட்ட இயக்குனர் சங்க்ராம் பட்டநாயக், இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், நாம் மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சி பற்றி பேசிவரும் இவ்வேளையில் இது போன்ற நிகழ்ச்சிகள் அது வெறும் பேச்சளவில் மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்தக் குழந்தைகள் தங்களுக்கு உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் இதுபோன்ற அமைப்புகளுக்கு உதவ வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும்.சமூக ஈடுபாடு என்பது எங்களுக்கு ஒரு கடமை அல்ல. அதுவே எங்களின் தாரக மந்திரம் என்று தெரிவித்தார்.ஆட்டிசம் உணவுமுறை ஆலோசகர் மற்றும் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினர் எம். பழனி குமார் பேசுகையில், இதுபோன்ற குழந்தைகளுக்கு சரியான உணவுமுறை அவர்களை சுறுசுறுப்பாகவும், கவனம் செலுத்தவும்,உணர்ச்சிபூர்வமாக சமநிலையுடனும் வைத்திருக்க உதவும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அதைப் புரிந்துகொண்டு, சரியான உணவுப் பழக்கம், பொறுமை மற்றும் ஊக்கத்துடன் அவர்களை ஆதரிக்கும்போது, அவர்களிடையே நல்லதொரு முன்னேற்றத்தை நம்மால் காண முடியும் என்று தெரிவித்தார்.நிகழ்ச்சி முடிவில் குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற சூயஸ் ஊழியர்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்ற குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.