June 9, 2021
தண்டோரா குழு
கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் நகர்புற பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்கு வந்த நிலையில் ஊரக,கிராம பகுதிகளில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.இந்நிலையில் கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தணிக்கை மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் மதுரா ஆய்வு செய்தார்.
அப்போது ,ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி மற்றும் அனிதா ஆகியோரிடம்,கிராம மக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர வேண்டும்.
கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் போன்ற கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தினார். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி போன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்த ஆய்வின் போது கொண்டையம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் சண்முக சுந்தரம், ஊராட்சி செயலர் பிரகாஷ்,கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.