August 11, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இம்மாதத்திற்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததது. ஆனால் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் 10ம் தேதிக்குள் வழங்கப்படுவதில்லை. மிகவும் தாமதமாக 20ம் தேதிக்கு மேல்தான் வழங்கப்பட்டு வருகிறது என தூய்மைப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இம்மாதம் 10ம் தேதி கடந்தும் கூட தற்போது வரை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில்,
‘‘ஒவ்வொரு மாதம் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது வரை மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து உடனடியாக சம்பளத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.