• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபா நாயகர்களும் சர்ச்சை நாயகர்களும் !

February 24, 2017 பா.கிருஷ்ணன்

“சட்டப் பேரவைத் தலைவர் அதிகம் பேசுவதில்லை” (Speakers seldom speaks) என்று ஆங்கிலத்தில் ஒரு தொடர் உண்டு.

நீதிமன்றத்தில் நீதியரசர் எப்படி நடுநிலைமையுடன் செயல்பட வேண்டுமோ அதைப் போலவே சட்டமன்றத்தில் பேரவைத் தலைவர் நடுநிலைமையுடன் இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதிக்கு எத்தனை அதிகாரம் உள்ளதோ அதைப் போல சட்டப் பேரவையில் சபாநாயகர் எனப்படும் சட்டப் பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.இதன் காரணமாக சர்ச்சைக்கு ஆளான பேரவைத் தலைவர்களை தமிழக பேரவை கண்டிருக்கிறது. அதே சமயம், சாமர்த்தியமாகச் செயல்பட்டு சர்ச்சைக்கு ஆளாகதவர்களும் உண்டு.

அண்மையில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் சமயத்தில் அமளி ஏற்பட்டு, “திமுகவினர் தன் கையை இழுத்தனர், சட்டையைக் கிழித்தனர். இதை எங்கே முறையிடுவது” என்று வருத்தப்பட்டார் பேரவைத் தலைவர் தனபால். ஆனால், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோரியது சட்ட விரோதமானது என்று திமுகவினர் எதிர்க்கிறார்கள். இப்படி சர்ச்சைகளைச் சட்டப் பேரவைகள் நாற்பது ஆண்டுகளாகவே கண்டு வருகிறது.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியேற்றப்பட்டார். சட்டப் பேரவையில் பெரும்பாலானோர் அப்போது ஆட்சியில் இருந்த திமுக ஆதரவு உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், சட்டப் பேரவையின் தலைவராக அப்போதிருந்த கே. ஏ. மதியழகன் ஆட்சிக்கு எதிரான நிலையை எடுத்திருந்தார். அப்போது, ஆளும் தி.மு.க.வினர் மதியழகனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து, சட்டப் பேரவையின் புதிய தலைவராக விருதுநகர் பெ. சீனிவாசனைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தனர்.

இது அவைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. பேரவைத் தலைவராக கே.ஏ. மதியழகன் பேரவையை நடத்திக் கொண்டிருந்த சமயத்திலேயே அவருக்குப் பக்கத்தில் இன்னொரு நாற்காலி போடப்பட்டு, அதில் பெ. சீனிவாசன் அமர்ந்து, “பேரவைத் தலைவர்” என்று செயல்பட்டார். இப்படி ஒரே சமயத்தில், ஒரே அவையில் இரு பேரவைத் தலைவர்கள் அவையை நடத்திய விநோதமான நிகழ்ச்சி தமிழக சட்டப் பேரவையில் திமுக ஆட்சியின்போது நடந்திருக்கிறது. அதையடுத்து, சட்டப் பேரவையில் ஏற்பட்ட அமளியால், எம்ஜிஆர் சட்டப் பேரவையை விட்டு வெளியேறி, “சட்டப் பேரவை செத்துவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டார். அவை நடவடிக்கைகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
1977ம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சராக எம்ஜிஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே சட்டப் பேரவையில் அவர் காலடி எடுத்து வைத்தார்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 77 முதல் முனுஆதியும் அதையடுத்து, 80ம் ஆண்டு முதல் க. ராஜாராமும் பேரவைத் தலைவராக இருந்தனர். அப்போதெல்லாம் பெரிய அளவில் சர்ச்சை எதுவும் எழவில்லை.

1984ம் ஆண்டு தேர்தலை அடுத்து, சட்டப் பேரவையின் தலைவராக பி.எச். பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, உடல்நலம் குன்றிய முதல்வர் எம்ஜிஆர் முக்கிய சமயங்களில் மட்டுமே அவைக்கு வந்தார்.

அந்த சமயத்தில், துக்ளக் ஆசிரியர் “சோ” மீதும், “வணிக ஒற்றுமை” என்ற இதழின் ஆசிரியர் பால்ராஜ் என்பவர் மீதும் சட்டப் பேரவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியனால் பால்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். “சோ” எஸ். ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

இது ஒருபுறம் இருக்க, “ஆனந்த விகடன்” வார இதழின் அட்டையில் அரசியல்வாதிகளைக் கேலி செய்து துணுக்குடன் கேலிச் சித்திரம் வெளியானது. அது சட்டப் பேரவையின் உரிமை மீறிய செயல் என்று பேரவையில் பிரச்சினை எழுந்தது. அந்த உரிமை மீறல் பிரச்சினையை அடுத்து, தனக்கு “வானளாவிய அதிகாரம்” உண்டு என்று கூறி, பி.எச். பாண்டியன் அதிரடி தீர்ப்பு கொண்டுவந்தார்.

“அந்தக் கேலிப் படத்துக்காக “ஆனந்த விகடன்” இதழின் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் முதல் பக்கத்தில் பெரிய அளவில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் ஆசிரியருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.

விகடன் ஆசிரியர் அதை மறுத்தார். சிறை சென்றார். ஆனால், தேன்கூட்டில் கை வைத்தது போல், அச்சம்பவம் குறித்த விவகாரம் நாடு முழுவதும் தீயாகப் பரவியது. பல இதழ்கள் பேரவைத் தலைவரின் செயலைக் கண்டித்து, கட்டுரைகள், செய்திகள், கேலிச் சித்திரங்களை வெளியிட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இறுதியில், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலையிட்டதால், விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டார்.

1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அரசை விமர்சித்து பல பத்திரிகைகள் செய்திகள், கட்டுரைகளை வெளியிட்டன. அது ஜெயலலிதாவின் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது சேடப்பட்டி எஸ். முத்தையா சட்டப் பேரவையின் தலைவராக இருந்தார்.

ஒரு முறை அரசை விமர்சித்து “முரசொலி” இதழிலும் “இலஸ்டிரேட்டட் வீக்லி” வெளியான கட்டுரைகள் அவையின் உரிமை மீறியதாக பேரவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. பேரவைத் தலைவர் உத்தரவில், முரசொலி இதழ் ஆசிரியர் முரசொலி செல்வம், இலஸ்டிரேடட் வீக்லி இதழின் சிறப்புச் செய்தியாளர் கே.பி. சுனில் ஆகியோர் மீது உரிமைக் குழு விசாரணை நடத்தியது. அதையடுத்து, உரிமை மீறல் பிரச்சினைக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேடப்பட்டி முத்தையா அறிவித்தார்.

அதன்படி, முரசொலி செல்வம் அவையில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிட்டார் முத்தையா. முரசொலி செல்வம் சட்டப் பேரவைக்கு வந்து, பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில், அவைக்குள் வைக்கப்பட்டிருந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். ஓர் இதழின் உரிமையாளருக்கு எதிரான இச்செயல் கடுமையான தண்டனையாகப் பேசப்பட்டது.

ஆனால், இலஸ்டிரேடட் வீக்லி இதழின் செய்தியாளர் கே.பி. சுனில் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. பின்னர் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து, புதிய சட்டப் பேரவை அமைந்தபோது, அந்த உரிமை மீறல் பிரச்சினை காலாவதியானது. தலைமறைவான கே.பி. சுனில் அதன் பின்னரே வெளியுலகுக்கு வந்தார்.

ஜெயலலிதா 2011ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, டி. ஜெயகுமார் சட்டப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று திமுகவினர் விமர்சனம் செய்தனர். இருந்தாலும், ஒரு நாள் திடீரென்று அவர் சட்டப் பேரவைத் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். அதற்குக் காரணம் குறிப்பிடப்படவில்லை. ட்டாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிருப்திதான் என்று கூறப்பட்டது.

ஒரு விழாவில் இடம்பெற்ற பேனரில் ஜெயகுமாரை வருங்கால முதல்வரைப் போல சித்திரிக்கப்பட்டதால் அவர் மீது தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது என ஊடக வட்டாரத்தில் பேசப்பட்டது. அவரையடுத்து ப. தனபால் பேரவைத் தலைவரானார்.

2016ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் மீண்டும் தனபால் சட்டப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அவர் நீடிக்கிறார். பொதுவாக அவர் அமைதியானவர்தான் என்றாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இப்படி, சட்டப் பேரவையின் தலைவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டாலும், பல சட்டப் பேரவைத் தலைவர்கள் சர்ச்சையில் சிக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். 1977ல் முனு ஆதி, 1980ல் க. ராசாராம், 1989ல் தமிழ்க்குடிமகன், 1996ல் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், 2006ல் ஆவுடையப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் படிக்க