• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்குருவின் பிறந்த நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு – தமிழகமெங்கும் விவசாய நிலங்களில் நடப்பட்டது

September 3, 2025 தண்டோரா குழு

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3-ஆம் தேதியை ‘நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக’ ஈஷா தன்னார்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகமெங்கும் உள்ள விவசாய நிலங்களில் இன்று (03/09/2025) ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சத்குருவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 235 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் 1,00,000-க்கும் மேற்பட்ட டிம்பர் மரங்கள் நடவு செய்யப்பட்டன. மேலும் ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் 24 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

கோவை ஈஷா யோக மையத்தில், சத்குருவின் பிறந்த நாளை முன்னிட்டு, மண் காப்போம் இயக்கம் சார்பாக, விவசாய நிலங்களில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொது மக்களுக்கு பிரசுரங்கள் வழங்குவது, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவது மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டையும் ஒருசேர மேம்படுத்த சத்குருவின் வழிகாட்டுதலில் காவேரி கூக்குரல் இயக்கம் துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் முன்னெடுத்து வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்வதால் மண்வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரம் ஆகியன ஒரே நேரத்தில் மேம்படும். இவ்வியக்கம் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.

காவேரி மற்றும் தமிழக ஆறுகளின் வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் (2025 – 26) 1.20 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, இதுவரை 40,34,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஈஷா மூலமாக கடந்த 25 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் 12 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு, மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான பயிற்சிகளையும், விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் நடத்தி வருகிறது. மேலும் இவ்வியக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கே நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதிலும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கும், இதர மரக்கன்றுகள் 10 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மேலும் ஜாதிக்காய், அவகோடா, சர்வசுகந்தி, லவங்கம், மிளகு ஆகிய விலை உயர்ந்த நறுமணப் பயிர் கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க