January 25, 2021
தண்டோரா குழு
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக அவுட்டு காய் தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் நந்தினி காலனியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெற்றிவேல், மணிமாலன், ராஜா, ராமராசு, பூந்திரை உள்ளிட்ட 5 பேர் படுகாயம். காயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பிரஸ் காலனி, நந்தினி காலனி பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மணிமாலன் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக காட்டு பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தும் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடியினை தாயாரித்துக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது எதிர்பாராதவிதமாக திடிரென பயங்கர சத்தத்துடன் அவுட்டுகாய் வெடித்துள்ளது. இதில் வீட்டின் மேல்கூரை சிதறியது, மேலும் அவுட்டாய் தாயாரித்துக்கொண்டிருந்த நரிக்குறவர்கள் 50 வயதான மணிமாலன், 40 வயதான ராஜா, 50 வயதான பூந்துறை, 35 வயது ராமராஜ், 13 வயது வெற்றிவேல் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து உடனடியாக பெரியநாயக்கன் பாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சட்ட விரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாட அவுட்டுகாய் என்னும் நாட்டு வெடி தாயாரித்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.