May 12, 2021
தண்டோரா குழு
தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 7 -ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.அன்றைய தினமே 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்கிழமை சட்டப்பேரவை கூட்டம் கூடியது.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதனிடையே, சட்டசபை சபாநாயகராக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்பாவும், துணைத் சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு இன்று (புதன்கிழமை) காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.பொறுப்பேற்றுக்கொண்ட மு.அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகனும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக அழைத்துச் சென்று பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர வைத்தனர்.