• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை எதிர்க்கிறேன் – பி.ஹெச். பாண்டியன்

February 7, 2017 தண்டோரா குழு

“வி.கே. சசிகலா கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை நான் எதிர்க்கிறேன்” என தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச். பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க வின் முன்னாள் மூத்த தலைவரும், தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவருமான பி.ஹெச். பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

பி.ஹெச். பாண்டியன் கூறியதாவது:

“வி.கே. சசிகலா கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை நான் எதிர்க்கிறேன். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரைக் கட்சியின் தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். சசிகலா, தற்போது தற்காலிகப் பொதுச் செயலாளராகத்தான் இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டத்திற்கு முன்னதாக போயஸ் கார்டனில் நடந்தது என்னவென்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அப்பல்லோ மருத்துவமனைக்குத் தினமும் சென்று வந்தேன். டிசம்பர் 5-ம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது ஜெயலலிதா அறையில் இருந்து வந்த சசிகலா உள்ளிட்டோர் கண்ணீர் சிந்தவில்லை. யாருடைய முகத்திலும் கவலையில்லை.

அந்த நேரத்தில், அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரியிடம் “இப்போதாவது ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டேன்.

அதற்கு அவர், “முதலமைச்சரின் உடல் எம்பாமிங் செய்யப்படவிருக்கிறது. அதற்கு 4 மணி நேரமாகும்” எனக் கூறி எங்களை அப்புறப்படுத்தினர்.

இறுதி அஞ்சலியின் போதும் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி சசிகலாவும் அவரது உறவினர்களும் மட்டுமே இருந்தனர்“

இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் கூறினார்.

மனோஜ் பாண்டியன் கூறியதாவது:

“2011-ம் வருடம் டிசம்பர் மாதம் தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஜெயலலிதா பேசினார். அப்போது, ‘நான் முதலமைச்சராக இருக்கிறேன். ஒரு பெருங்கூட்டம் முதலமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன்’ என்றார்.

அதன் பிறகு அந்தக் கும்பலைக் கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார் அவர். கட்சியின் சட்டப் பிரிவு செயலாளர் என்ற முறையில், கட்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினேன்.

2012 –ம் வருடம் சசிகலா மன்னிப்புக் கடிதம் கேட்டு மீண்டும் உள்ளே வந்தார். அப்போது ஜெயலலிதா என்னிடம், ‘அவர்களை அரசியலில் ஈடுபடுத்தமாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்’ என்றார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து ‘துக்ளக்’ ஆசிரியர் சோவையும் என்னையும் அழைத்த ஜெயலலிதா, ‘எனக்குப் பயமாக இருக்கிறது. இந்த கும்பல் என்னை விஷம் வைத்துக் கொன்றுவிடும் என பயமாக உள்ளது’ என்றார்.

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்குக் கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம். மக்கள் அனைவரின் விருப்பத்திற்கு மாறாக தற்போது தமிழகத்தில் அரசியல் சூழல் உள்ளது“.

இவ்வாறு மனோஜ் பாண்டியன் கூறினார்.

மேலும் படிக்க