March 20, 2018
தண்டோரா குழு
நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் நடராஜன் காலமானார்.
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
அவரது உடல் சென்னை பெசன்ட்நகர் இல்லத்தில் காலை 7 மணி முதல் 11 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதனையடுத்து அவர் உடல் சொந்த ஊரான விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் அக்.23, 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன்.
சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். சசிகலா- நடராசன் திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். காலப்போக்கில் நடராஜன் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.
1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார். மேலும் அரசியலில் ஜெயலலிதா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.