July 6, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 67, 69வது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் மற்றும் நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர்
ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் முன்களப்பணியாளர்களிடம் தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்புப்பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் போது சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை கண்டறிந்து அதன் விபரங்களை குறித்து களஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்திட வேண்டும், என்றார்.
தொடர்ந்து நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் வ.ஊ.சி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், நகர்நல அலுவலர் ராஜா, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.