December 22, 2020
தண்டோரா குழு
Lகோவை விமானநிலையத்தில் தற்போது 9,500 அடி நீள ஓடுதளம் உள்ளது.சர்வதேச விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து செல்ல வேண்டும் என்றால் இதைவிட கூடுதல் ஓடுதளம் தேவைப்படுகிறது.எனவே கோவை விமானநிலையத்தை 12,500 அடி நீளம் கொண்ட ஓடுதளமாக விரிவாக்கம் செய்ய பல ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தற்போது விமானநிலையம் உள்ள பகுதியில் 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 134 ஏக்கர் பாதுகாப்பு துறைக்கு சொந்தமானது. 28 ஏக்கர் புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்த நிலங்கள் உடனடியாக கையகப்படுத்தப்பட்டன. மீதமுள்ள நிலங்களில் வீடுகளும், விவசாய நிலங்களுமாக உள்ளன. இந்த நிலத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கோவை விமானநிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படஉள்ள நிலங்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு விரைந்து இழப்பீடு தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருகூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் விமானநிலை விரிவாக்க நில எடுப்பு வருவாய் அதிகாரியை சந்தித்து பேசினர்.
பின்னர் நில உரிமையாளர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை விமானநிலைய விரிவாக்க பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் வீடுகளுக்கு சதுரஅடிக்கு ரூ.1,500-ம், விவசாய நிலத்திற்கு ரூ.900-ம் என நிர்ணயம் செய்யப்பட்டது. நிலத்தை வழங்குவதற்கான ஓப்புதல் கடிதத்தை பெரும்பாலானா நிலஉரிமையாளர்கள் வழங்கி விட்டனர். ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அரசு உள்ளது. இதனால் அந்த நிலங்களை நாங்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நாங்கள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே எங்களுக்கு விரைந்து இழப்பீடு தொகைவழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.