July 3, 2018
தண்டோரா குழு
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு தரவில்லை என துண்டு பிரச்சுரம் வழங்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை என ஒரு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு முறையான இழப்பீட்டினை அரசு வழங்கவில்லை எனவும்,இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரி துண்டு பிரச்சுரம் வழங்கிய இருகூரை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெயப்பிரகாஷ்,அமமுக உறுப்பினர் செந்தில்ராஜ் ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
அதிமுகவை சேர்ந்த தேவராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில்,அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியது,மக்களை தூண்டிவிட்டது ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் இருவரையும் வருகின்ற 17 ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
மேலும்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துண்டுதலின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,பாரபட்சமான முறையில் இழப்பீடு வழங்காமல் முறையாக இழப்பீடு வழங்க கோரியதற்காக கைது செய்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஜெரபிரகாஷின் மனைவி வைரமணி தெரிவித்தார்.இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.