February 3, 2018
தண்டோரா குழு
கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 14 ஆண்டுகளாக பெண்களுக்கான லிபாஸ் தையல் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பாலிடெக்னிக் வாயிலாக சமூக முன்னேற்றத்திற்கான திட்டத்தின் கீழ் இந்த மையத்தின் மூலம் பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா மற்றும் பயிற்சி மையத்தின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா அண்மையில் கோவை கரும்புக்கடையில் அமைந்துள்ள ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பெண்கள் பிரிவு தலைவர், அஸ்மா பஷீர் தலைமை தங்கினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் S. B. சந்திரன், ஒருங்கிணைப்பாளர் Dr. தேவராஜன்,
இஸ்லாமிக் கல்வி அறக்கட்டளை செயலாளர் K. அப்துல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புச் செயலாளர், M. அப்துல் ஹக்கீம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர்.
இவ்விழாவில் இம்மையத்தில் பயின்ற பெண்கள் தங்களது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் குர்ஆன் மொழிபெயர்ப்பும் இஸ்லாமிய புத்தகமும் வழங்கப்பட்டது.