February 23, 2021
தண்டோரா குழு
தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதில் முக்கியமான அறிவிப்புகள் பின்வருமாறு:
ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு. அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பஸ்கள் மின்சார பஸ்களாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ. 1,580 கோடியில் 2,200 பி.எஸ்-6 பஸ்களும், 500 மின்சார பஸ்களும் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் குறித்து கோவையை சேர்ந்த தொழில்துறையினர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர்,திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், ‘‘
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6683 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலிமைப்படுத்த 2021 தமிழ்நாடு தொழில் கொள்கை அறிக்கையின் போது அறிவிக்கப்பட்ட ரூ. 1000 கோடி நிதியில், 300 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கப்படும். தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தனியார் தொழிற்பேட்டைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை காட்மா சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்,’’ என்றார்.
கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில்,
‘‘ கோலை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 6683 கோடி ரூபாய் ஒதுக்கீடு, மின்சாரத்துறைக்கு 7217 கோடி ரூபாய் ஒதுக்கீடு, வேளாண்துறைக்கு 11982 கோடி ரூபாய் ஒதுக்கீடு,தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்தம் விதமாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 2350 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 2000 மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் உட்பட 12000 புதிய பேருந்துகள் வாங்க திட்டம், சென்னை -கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்துக்கு 6448 கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை கொடிசியா வரவேற்கிறது,’’ என்றார்.
கோவை பம்புசெட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா ) தலைவர் மணிராஜ் கூறுகையில்,
‘‘கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பை வரவேற்கிறேன். அதே சமயம் தொழில் முதலீட்டு கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவு. கொரோனா காலகட்டத்தில் சிறு,குறு தொழில்களின் பொருளாதாரம் சரிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் குறுந்தொழில் முனைவோர்களுக்கு என எந்த அறிவிப்பும் இல்லை,’’ என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில்,
‘‘ கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரபிரசாதமாக கருதுகிறோம். மத்திய அரசு ஏற்கனவே பெயர் குறிப்பிடாமல் 20 நகரகங்களுக்கு மெட்ரோ திட்டத்தை அறிவித்துள்ளதை. இத்திட்டம் மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சியளிக்கும்,’’ என்றார்.