December 10, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வன குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளிலுள்ள சிறு கிராமங்களில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், கழிப்பிடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் முள்ளாங்காடு, ஜாகீர்போரத்தி, சர்கார் போரத்தி, சீங்கப்பதி, சாடிவயல்பதி, பொடடப்பதி, வெள்ளப்பதி மற்றும் மருதமலைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் வன நிலங்களில் விவசாயம் செய்தும், குடியிருப்புகள் ஏற்படுத்தியும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களது குடியிருப்பிற்க்கு நில அனுபவ உரிமையும், விவசாய நிலங்களுக்கான நில அனுபவ உரிமையும் என மொத்தம் 1678 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வனஉரிமை சட்டத்தின் கீழ் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களில் கடந்த மாதம் 187 பழங்குடியின மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 105 விண்ணப்பத்தாரர்களுக்கு வரும் 15 நாட்களுக்குள் பட்டாக்கள் வழங்க உத்தரவிடபட்டுள்ளது.
வால்பாறை, கல்லார்குடி செட்டில்மெண்ட் மக்களுக்கு மாற்று இடமாக தெப்பகுளம்மேடு பகுதியில் குடியிருப்பு ஏற்படுத்தி வன உரிமை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேவையான பேருந்து வசதி ஏற்படுத்தவும், மலைவாழ் பகுதிகளில் நடமாடும் நியாய விலைகடைகள் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சப் கலெக்டர் ( பொள்ளாச்சி) வைத்திநாதன், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆரோக்யராஜ் சேவியர், உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் மற்றும் வன குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.