May 1, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது மாவட்டமாக இருந்த கோவை சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்திலுள்ள 400 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு தேவையான மளிகை பொருட்களை ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பில் வழங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வின் தொடக்கமாக வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் கொரொனா தடுப்பு கண்காணிப்பாளர் ஞானசேகரன் இ ஆ ப, முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
கோவையில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தநிலையில் 132 பேர் முழுமையான குணமடைந்துள்ளனர். மீதம் கோவையில் இன்னும் 9 பேர் மட்டும் சிகிசையில் உள்ளனர்.இந்த சூழ்நிலையில் கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.கே.கே புதூர் பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் சிவப்பு நிற பகுதியில் இருந்து ஆரஞ்சு நிற பகுதியாக வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்புவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது.விரைவில் பச்சை மண்டலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் இன்னும் ஒருவார காலத்திற்குள் கோவையில் சிகிச்சையில் இருக்கும் 9 பேரும் வீடு திரும்புவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.