May 28, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 890 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4000க்கும் மேல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சியில் மீண்டும் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகால் சுகாதார துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரக பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 890பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 602 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு பொள்ளாச்சியில் 76 பகுதிகளும், மதுக்கரையில் 70 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே குறைவாக கிணத்துக்கடவில் 1 பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்,’’ என்றார்.