January 20, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் மூ கருணாகரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இருவரும் இணைந்து வெளியிட்டனர்.கோவை மாவட்டத்தில் 414 மூன்றாம் பாலினத்தவர் புதிய வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக தேர்தல் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் மூ. கருணாகரன் மற்றும் ஆட்சித்தலைவர் கு. ராசாமணி வெளியிட்டனர்.இதில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 2 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள்,414 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 37667 புதிய 18 வயது நிரம்பிய வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 1 லட்சத்து 27 ஆயிரத்து 562 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 35 ஆயிரத்து 551 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தமாக 30 லட்சத்து 62ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அரசியல் கட்சி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.