May 25, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கூடுதல் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுக.,வின் சிங்காநல்லூர் மற்றும் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கோவை மநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால், தடுப்பூசி மையங்களுக்கு பல கிலோ மீட்டர் தூரங்களுக்கு அப்பால் இருந்து மக்கள் வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டி அதிமுக.,வின் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஜெயராமன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் தடுப்பூசியில் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.தடுப்பூசி மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் தடுப்பூசி மையத்தை தேடி வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளோம்.
அதேபோல தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தும் மக்களுக்கு தனியாக மையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்றார்.