July 23, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 350 ஹெக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு மூலம் மேற்பரப்பு சொட்டு நீர் பாசன கருவி அமைப்பதற்கு வழக்கமான பயிர் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
தற்போது கூடுதல் மானியமாக ரூ.38 ஆயிரம், தறையின் கீழ் அமைக்கும்போது ரூ.49 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதேபோல் ஆழ்குழாய் கிணற்றில் பயிர் மானியம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 133 வழங்கப்படுகிறது.
இதற்கு கூடுதல் மானியமாக ரூ.24 ஆயிரம், தரையின் கீழே அமைக்கும்போது ரூ.36 ஆயிரம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், 3 புகைப்படங்கள், நிலவரைபடம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி நுண்நீர் பாசன இயக்குனர் 9442635436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் கூறியுள்ளார்.