April 14, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதி கடைவீதியில் தியாகி குமரன் காய்கறி மார்கெட், உக்கடத்தில் ராமர் கோயில் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட், உக்கடம் – செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள சில்லரை மீன் மார்க்கெட், உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை சாயிபாபாகாலனியில் உள்ள எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட், அண்ணா மார்க்கெட் போன்றவைகள் உள்ளன.
இந்த மார்க்கெட்டுகளில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்கள், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்த மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்
,‘‘ மாநகராட்சியில் உள்ள மார்க்கெட்டுகளை மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் உள்ளிட்ட கொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் வியாபாரிகளுக்கு எடுத்துக் கூறி வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க திவிர கண்காணிப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றனர்.