December 12, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர் பகுதிகளில் வார்டு வாரியாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் வாய்ப்புள்ளது. இதில் டெங்கு கொசுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து டெங்கு கொசு தடுப்பு பணிகள் வார்டு வாரியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
‘‘ டெங்கு கொசுப்புழுக்களை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் கொசு மருந்துகள் தெளிக்கப்படுகிறது. மேலும் வார்டு வாரியாக வீடுகளுக்கு சென்று தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநகராட்சிக்குட்பட்ட தண்ணீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் கலக்கப்படுகிறது. மேலும் டெங்கு பாதிப்பு கண்டறியப்படும் இடங்களை சுற்றி 500 மீட்டர் தூரம் வரை மாஸ் கிளினிங் செய்யப்படுகிறது,’’ என்றனர்.