June 23, 2021
தண்டோரா குழு
கட்டுமான பணிகள் தொடர்பான உத்தரவு நகலை பெற 2.5 கோடி பணம் கேட்டதாக கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் மீது கோவையில் கட்டுமான நிறுவன இயக்குனர் புகார் தெரிவித்துள்ளார்.
கோவையில் 62 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளுவதற்கான உத்தரவினை 2.5 கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளும்படி கூறி உத்தரவு நகலை கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையரும், தற்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியருமான குமாரவேல் பாண்டியன் எடுத்துச் சென்று விட்டதாக இமாமி ஏரோசிட்டி கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கோவை காளப்பட்டி பகுதியில்62 ஏக்கரில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு கோவை மாநகராட்சியில் அனுமதி கேட்டு இருந்தாகவும் அதற்கு நிலுவையில் உள்ள வரி 52 லட்ச ரூபாய் மற்றும் எதிர்கால பராமரிப்பு தொகை என 3,60,12000 ரூபாய் ஆகியவற்றை செலுத்தும்படி கேட்டதாகவும் மற்ற மாநகராட்சிகளில் எதிர்கால பராமரிப்பு தொகை இல்லாததால் அதை செலுத்த நீதி மன்றத்தில் தடையுத்திரவு பெற்றதாகவும் தெரிவித்தார்.
எதிர்கால பராமரிப்பு தொகையினை செலுத்தஉயர் நீதிமன்றத்தில் தடை உத்திரவு வாங்கியதையும் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்காமல் இருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் வேறு வழியின்றி 3,60,12000 ரூபாயினை கருவூலத்தில் செலுத்தியதாகவும், அதன் பில்களை காட்டிய பிறகே பின்னரே மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உத்திரவில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்த சோமசுந்தரம்,இந்நிலையில் தற்போது வரை அசல் உத்தரவு ஆணை தமக்கு தரவில்லை என கூறிய அவர், 2.5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு ஓரிஜினல் உத்திரவு ஆணையை வாங்கிகொள்ளும்படி அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், புகார் தெரிவித்தார்.
மேலும் தற்போது மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மாறுதலாகி, வேலூர் மாவட்ட ஆட்சியராக சென்று விட்டதாகவும் இப்போது ஓரிஜினல் உத்திரவு நகலை யாரிடம் பெறுவது என தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.மேலும் இதற்கு உடந்தையாக இருக்கும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடாக வசூல் செய்த 3,60,12,000 ரூபாயினை திரும்ப வழங்கவேண்டும் எனவும் தெரிவித்த சோமசுந்தரம்,இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஓரிஜினல் உத்திரவு நகலை வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.