December 21, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் 300க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் (Micro Composting Center) அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. சுமார் 4க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மையங்களில் உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நாள் ஒன்றுக்கு சுமார் 900 டன் வரை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த குப்பைகளின் அளவை கட்டுப்படுத்தவே நுண்ணியிரம் உயிர் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்திற்காக கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் சிறிய ரக நான்கு சக்கர வாகனம் மூலம் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் 100 கிலோவிற்கு மேல் குப்பைகள் வந்தால், அந்த குப்பைகளை அவர்களே அறிவியல் ரீதியாக மேலான்மை செய்யவும் மாநகராட்சி சார்பாக உத்திரவிடப்பட்டுள்ளது.இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே வீடுகளுக்கே சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதால் பொது இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்ற மாநாகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் பொது இடங்களில் 300 குப்பைத் தொட்டிகள் உள்ளன. இவைகளில் 100 குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.மத்திய மண்டலத்தில் இருந்து பெறப்படும் மக்கும் குப்பைகள் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது’’என்றார்.