January 8, 2021
தண்டோரா குழு
தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் வரும் 17ம் தேதி மாநகராட்சி சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் அன்று பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:
வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 நடமாடும் ஊர்திகள் மூலமும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது. எனவே கோவை மாநகரில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்த விதமான நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.