January 20, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனுக்கு டெல்லி அப்துல் காலம் அறிவியல் மையம் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
டெல்லி அப்துல் காலம் அறிவியல் மையம் சார்பில், கடந்த ஆண்டு முதல் சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அப்துல் கலாம் விருதுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில்,10- க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அப்துல் கலாம் விருது இன்று(ஜன 20) வழங்கப்பட்டது. இதில், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனுக்கும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆணையாளராக தனது 28-வது வயதில் கடந்த 2014-ம் ஆண்டில் பதவியேற்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். இவரின் சிறந்த முயற்சியால் ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வானது.
இதுமட்டுமின்றி கோவையில் கழிப்பறைகள் கட்டியது, சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, விஜய கார்த்திகேயனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழா டெல்லி அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் இன்று நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் அஜய் டம்டாவிடமிருந்து விஜய கார்த்திகேயன் விருதைப் பெற்றுக்கொண்டார். அதைபோல் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கும் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.