January 21, 2026
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் இதனை திறந்து வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன அந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகள் எந்த அளவு நிறைவடைந்துள்ளது எத்தனை நாட்களில் பணிகள் நிறைவடையும் என்பது குறித்து ஒப்பந்ததாரரிடமும் பொறியாளரிடமும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு,
முதல்வர் திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க கூடிய வகையில் எதிர்காலத்தில் அறிவுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் நூலகங்கள் அமைத்து வருவதாகவும், அதன்படி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு தெற்கு பகுதி மாவட்டங்கள் அனைத்தும் அந்த நூலகத்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்வியாளர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய கோவையில் இந்த நூலகம் அமைக்க 2024 ஆம் ஆண்டு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் இந்த நூலகம் அமைய உள்ளதாகவும், இதற்காக அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி விமான நிலையத்தின் தடையில்லா சான்றுகளும் வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 245 கோடி ரூபாய் கட்டிடத்திற்கும், 5 கோடி ரூபாய் கணினி உள்ளிட்ட சாதனங்களுக்கும் 50 கோடி ரூபாய் புத்தகங்களுக்கும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஒன்றிணைந்த கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பெரியார் என தெரிவித்த அமைச்சர், இந்த சமுதாயத்திற்கும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களும் அவரை பின்பற்றக்கூடிய வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை அவர் வழங்கி மாபெரும் தலைவராக இருப்பவர் பெரியார் என குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே இந்த கட்டிடத்திற்கு பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த கட்டிடத்தில் கலையரங்கம், டிஜிட்டல் உலகம், அறிவியல் மையம், குழந்தைகளின் உலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவு, தமிழ் நூல்களுக்கு தனிப்பிரிவு, ஆங்கில நூல்களுக்கு தனி பிரிவு, போட்டி தேர்விற்கு தனிப்பிரிவு, பருவ இதழ்கள் தினசரி பத்திரிகைகளுக்கு தனி பிரிவு, இது மட்டுமின்றி இதையெல்லாம் நிர்வாகிப்பதற்கு நூலகருக்கு நூலகர் அலுவலகம் அமைக்கப்படுகிறது என தெரிவித்தார். லிப்ட்கள், நகரும் படிக்கட்டுகள் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் மாலை நேரங்களில் இங்கு படிப்பவர்கள் வெளியில் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
தற்பொழுது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், பிப்ரவரி பத்தாம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்து விடும் என ஒப்பந்ததாரர் தெரிவித்திருப்பதாக கூறினார். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகுதான் பொதுப்பணித்துறைக்காக கோவைக்கு தனி ரீஜியன் வந்தது என குறிப்பிட்ட அவர் மண்டல தலைமை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பத்தாம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் முதல்வரிடம் இசைவு பெற்று பிப்ரவரி 10 முதல் 28ஆம் தேதிக்குள் முதல்வரால் இந்த பெரியார் அறிவுலகம் திறக்கப்படும் என தெரிவித்தார்.
.