June 11, 2018
தண்டோரா குழு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.