December 16, 2020
தண்டோரா குழு
கோவை தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் அதன் நிர்வாகிகள், மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:
தொழிற்சாலைகள் பயன்படுத்தும் அனைத்து முக்கியமான மூலப்பொருட்களின் விலையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை 12.5 சதவீதம் முதல் 275 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்காக சில வணிகர்கள் இந்த மூலப்பொருட்களை இருப்பில் வைப்பதால் மூலப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக இப்பகுதியில் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன. இதனால் வேலையின்மை ஏற்பட்டு பலருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு சமூக சிக்கலும் ஏற்படும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கோவையின் தொழில் அமைப்புகளின் கூட்டு குழு சார்பில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.மேலும் தமிழக முதல்வருக்கும், இதர அமைச்சர் பெருமக்களுக்கும் இந்த கோரிக்கை மனுவை தபால் மூலம் சமர்ப்பித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.