September 2, 2025
தண்டோரா குழு
கோயம்புத்தூரை சேர்ந்த தொழில்முனைவோரும், திரைப்பட இயக்குநரும், 2024 பொது தேர்தலில், கோவை பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட அருண்காந்த், Indiema.in என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகம் செய்தார்.
இது சமூக ஊடகத் தளங்களின் வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையோ அல்லது பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்களையோ மையப்படுத்தாமல், உண்மையான படைப்பாற்றல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருண்காந்தின் நிறுவனமான இன்ஃபோ ப்ளுட்டோ மீடியா வர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Info Pluto Media Works Pvt. Ltd.) இரண்டரை ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது.
படைப்பாற்றல் திறன் கொண்ட, அவசியமான, அறிவுபூர்வமான தகவல்களையும், உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தவும், வர்த்தக உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளவும் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைத்தளத்தில் கணக்கு துவங்கும் நபர்கள் அவர்கள் விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதை மட்டும் காண முடியும். ஏதோ ஒரு மென்பொருள் இங்கு அதிகாரம் கொண்டதாக இருக்காது. சமூக வலைதள பயன்பாட்டாளர்களே இங்கு அதிகாரம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த தளத்தில் படைப்பாளிகள் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காக எதை எதையோ பதிவு செய்து, அதன் மூலம் பின் தொடர்பாளர்களை அதிகரிக்கவேண்டும் என்ற வழக்கமான போட்டிக்கு இடம் இல்லை. மாறாக அவர்களின் படைப்புக்கே மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படும்.
இந்த தளத்தின் அறிமுகத்திற்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அருண்காந்த் Indiema.in-ன் தனித்துவமான செயல்பாடுகளை மேலும் விளக்கினார்.இதில் கணக்கு துவங்குபவர்கள், பிற படைப்பாளர்களை பின்தொடர வேண்டிய அவசியமின்றி, அவர்களின் படைப்புகளை நேரடியாகப் பார்வையிடலாம்.ஒரு படைப்பாளர் தான் உருவாக்கிய படைப்புக்களை அதிகப்படியான பார்வையாளர்களிடம் எடுத்து செல்ல கட்டணம் செலுத்தினால் தான் முடியும் என்ற நிலையை இந்த தளம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இதில் அனைவரும் இயல்பாகவே இணைக்கப்பட்டுள்ளனர், என அவர் தெரிவித்தார்.
இந்தத் தளத்தில், படைப்பாளர்கள் தங்கள் பதிவுகள் எந்த பிரிவின் கீழ் வருகின்றன என்பதை கட்டாயம் வகைப்படுத்த வேண்டும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த பதிவுகள் அவர்களிடத்தில் எளிதாக சென்றடையும்.
பயனர்கள் தாங்கள் விரும்பாத தலைப்புகளை எளிதாக குறித்து வைத்துக்கொள்ள வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பிடிக்காத எந்த ஒரு படைப்பும் அவர்கள் கண்ணில் படாத படி செய்யமுடியும். இதை ‘நெகடிவ் ஃபில்டர்கள்’ என அருண் அழைக்கின்றார்.
இந்த தளத்தில் படைப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அழகான தலைப்பும், விரிவான பதிவும் இங்கு முக்கியத்துவம் பெறும். அதற்கு துணையாக படங்கள், விடியோக்கள் இருக்கும். இதில் படங்கள், வீடியோக்கள் என்பது பதிவுகளில் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படாது. லிங்க்-குகளாகவே அவை இருக்கும். ஒரு பதிவில், படைப்பாளர் யார் என்பது முதலில் தெரிவிக்கப்படாது. ஒரு பயனர் தான் விரும்பிய தலைப்பின் கீழ் உள்ள படைப்புக்களை பார்வையிட முடியும். அது பிடித்திருந்தால், படைப்பாளரின் அடையாளம் அதன் பின் வெளிப்படுத்தப்படும்.
ஒரு பதிவு இந்த தளத்தில் அதிகபட்சம் 30 நாட்கள் இருக்கும். அதை உருவாக்குபவர்கள், 1 முதல் 30 நாட்கள் வரை அதன் வாழ்நாளை முடிவு செய்யலாம். இதன் மூலம், தேவையற்ற பழைய தகவல்கள் பயனர்களுக்கு சென்றடையாது. மேலும் இங்கு புதிய படைப்புகளும் தகவல்களும் தொடர்ந்து பகிரப்படுவது உறுதி செய்யப்படும்.
ஒரு படைப்பாளியின் தன்னம்பிக்கையை சிதைக்கும் நோக்கில் வீசப்படும் கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோலிங் எனும் கிண்டல்களுக்கு இந்த தளத்தில் இடமில்லை. எந்த பதிவுகளுக்கும் பொதுவான கருத்துப் பகுதி வழங்கப்படுவதில்லை. ஒருவேளை பயனர்கள் ஒரு பதிவை பாராட்ட விரும்பினால், அதை குறிப்பிட்டு தங்கள் சொந்தப் பதிவை உருவாக்கலாம்.
இதில் பணம் செலுத்தி ஒரு படைப்பை பயனர்கள் முன்பு கொண்டு செல்லமுடியாது. மக்கள் விரும்பும் தலைப்புகளை மட்டுமே அவர்கள் காண முடியும். இந்தத் தளத்தில் உள்ள பதிவுகளை பார்வையிட எந்தக் கட்டணமும் இல்லை. இருப்பினும், படைப்பாளராக பதிவுகளை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ. 1000 சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்னாள் மாணவர் சங்கங்கள், சமூக ஆர்வல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் கூட தங்களுக்கான குழுக்களை இதில் ஏற்படுத்தி கொள்ள முடியும். மேலே கூறிய அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு தனிப்பட்ட நெட்வர்க்கையும் அவர்கள் உருவாக்கி அதன் கீழ் பிரிவுகளை மிக எளிதாக அமைக்க முடியும்.
இந்த தளம் கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அர்த்தமுள்ள சமூக ஊடக அனுபவத்தை நாடும் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“2025 சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து ஒரு சமூக வலைத்தளம் உருவாக வேண்டும் என இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னதாகவே நாங்கள் இதற்கான முயற்சியை முன்னெடுத்தோம். இப்போது இதை உருவாக்கிவிட்டோம். இதில் மோடி அவர்கள் ஒரு கணக்கு துவங்கி எங்களுக்கு ஆதரவு கொடுப்பாரா?” என எதிர்பார்ப்பதாக அருண்காந்த் கூறினார்.