January 23, 2020
கோவை தேசிய நெடுஞ்சாலையில் 9.5 டன் செம்மர கட்டைகளை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை மாவட்டம் கணியூர் சோதனைச்சாவடியில் செவ்வாய் கிழமை இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூரில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்தபோது அதில் 9.5 டன் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரி மூலம் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த ராஜ்குமார் என்பவரை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 9.5 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு 4.27 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செம்மர கட்டைகளை கடத்தி வந்த ராஜ்குமாரை கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.