February 22, 2018
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் அடுத்த ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவை கல்லூரியின் செயலாளர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் பிரேமலதா வரவேற்புரையாற்றினார்.அப்போது பேசிய கல்லூரியின் செயலாளர், மாணவ சமுதாயம் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த இது சிறந்த ஒரு களம் என்றார்.
இந்த கலைத் திருவிழாவில் தகவமைப்பு தாளங்கள், பல்வேறு பொழுதுபோக்கு தனிநபர் நடனம், குழுநடனம், பேஷன் அணிவகுப்பு, மருதாணி அலங்காரம், ஒரு நிமிடம் சமையல் கலை, விளம்பரக்கலை, தேவையற்ற பொருட்களிலிருந்து கலைநயமிக்க பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.
இவ்விழாவில் தமிழகமெங்குமிருந்து சுமார் 30 கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும்,இந்த கலைத்திருவிழாவிற்கு சின்னத்திரை நடிகர் கதிர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் “கலக்கபோவது யாரு சீசன்- 5 ன்” வெற்றியாளர் முகமது குரோசி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.