June 21, 2019
தண்டோரா குழு
கோவை ஜீவா நகர் பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனே வழங்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை சாய்பாபாகாலனியை அடுத்துள்ள கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜீவா நகர், வண்டிப்பாதை பகுதி ஆக்கிரமிப்புகளை பிப்ரவரி 18ம் தேதியில் இருந்து அகற்றப்படுவதாக மாநகராட்சி சார்பில் அங்குள்ள அனைத்து வீடுகளின் கதவுகளிலும் இறுதி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் இங்குள்ள வீடுகளை காலி செய்து உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் சில வீடுகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி டோக்கன் பெற்ற காலி செய்யப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் 2 நாட்களுக்கு முன்பு இடிக்காமல் உள்ள 120 வீடுகளின் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்து அன்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் ஜீவா நகர் பகுதியில் இருந்து காலி செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும். அதுவரை துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை அந்தந்த வீடுகளுக்கு தரவேண்டும். இது குறித்து அனைத்து கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெரியார் திராவிட கழக மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கட்சி கலையரசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் மலரவன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், த.மு.ம.க. ம.ம.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஜீவா நகரில் வசிக்கும் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.