December 5, 2021
தண்டோரா குழு
கோவையில் நேற்று மதியம் கன மழை கொட்டியது. இதன் காரணமாக கோவை லங்கா கார்னர், அவினாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி கீழ் பாலம், சிவானந்தா காலனி பைபாஸ் சாலை கீழ்பாலம் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியது. இதில் தனியார் பஸ், கார் போன்றவைகள் நீரில் மூழ்கின.
மேலும் வடகோவை, லட்சுமி மில்ஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளம் அதிக அளவில் வழிந்தோடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு சாலை எங்கிலும் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டு வாகனங்கள் சிக்கித்தவித்தன.
இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சியுடன் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் சமூக பொருப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இணைந்து உடனடியாக மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜி. சவுந்தரராஜன் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து நேற்று இரவு சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட மழை நீர் அகற்றும் பம்புகளுடன் கூடிய 5 வாகனங்கள் நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தனது பணிகளை துவக்கியது. இதில் 4 வாகனங்கள் அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கிய 43 லட்சம் லிட்டர் மழைநீரை அகற்றியது (முதல் வாகனம் 20 லட்சம், இரண்டாவது வாகனம் 12 லட்சம் மழைநீரை அகற்றியது).
மூன்றாவது வாகனம் மேம்பாலத்தின் மேற்கு பகுதி நுழைவு பகுதியில் தேங்கிய 6 லட்சம் லிட்டர் மழைநீரை அகற்றியது. நான்காவது வாகனம் பாலத்தின் மேற்கு பகுதியின் இரண்டாவது பகுதியில் தேங்கிய 5 லட்சம் லிட்டர் மழைநீரை அகற்றியது. மேலும் 5வது வாகனம் கோவை சத்தியமங்கலம் சாலையில் கரட்டுமேடு பகுதியில் சிவன் கோவில் அருகில் தேங்கிய 8 லட்சம் லிட்டர் மழைநீரை அகற்றியது.
இந்த மகத்தான பணியில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் கோவை மக்களுக்கு சேவையாற்றியதை மிகவும் பெருமையாக கருதுகிறோம். மேலும் இந்த மழைகாலம் முடியும் வரை எங்களின் இந்த சமூக சேவை கோவையில் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இந்த சேவையானது சி. ஆர். ஐ. பம்ப் நிறுவனம் கோவையை தவிர சென்னை மற்றும் தூத்துக்குடியில் அந்தந்த மாநகராட்சியுடன் இணைந்து சிறப்பாக செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.