June 21, 2018
தண்டோரா குழு
கோவை குறிச்சி பகுதியில் உள்ள அம்மா யோகா மையத்தை அதிமுகவினர் பூட்டி சென்றதால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் யோகா மையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை குறிச்சி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா யோகா மையம் செயல்பட்டு வருகிறது.இந்த யோகா மையத்தில் சர்வதேச யோகா தினமான இன்று யோகாசன நிகழ்ச்சிகளை நடத்த பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.
இந்த சூழலில் பாரதிய ஜனதா கட்சியினர் யோகாசனம் செய்வதற்கு யோகா மையம் வந்த போது திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்தது.குறிச்சி பகுதியின் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வேணுகோபால் அம்மா யோகா மையத்தை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத்தலைவர் நந்தகுமார் தலைமையில் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது உடனடியாக யோகா மையத்தை யோகாசனம் செய்வதற்கு திறந்து விட வேண்டும் எனவும்,இல்லை எனில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
பா.ஜ.க வினருக்கு போட்டியாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தனது ஆதரவாளர்களுடன் யோகா மையத்தின் அருகில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக யோகா மையத்தை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.யோகாசனம் என்ற பெயரில் இந்துத்துவத்தை வளர்க்கவும்,பிரச்சினையை உருவாக்கவும் பாரதிய ஜனதா கட்சியினர் முயல்வதாகவும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தெரிவித்தார்.
மேலும்,இருதரப்பினரும் தனித்தனியாக போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் இரு தரப்பினரும் கலைந்து செல்ல மறுத்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே யோகா மையம் திறக்கப்படாததால் யோகா மையத்தின் முன்பாக பா.ஜ.க வினர் யோகாசனம் செய்தனர்.சாலையில் அமர்ந்து கொண்டு சிரிப்பாசனம் உட்பட பல்வேறு யோகாசனங்களை பா.ஜ.கவினர் செய்தனர்.இந்த நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகர காவல் துறையினரின் நீண்ட நேரம் நடைபெற்ற சமரச முயற்சிக்கு பின்னர் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.ஆனால் யோகாசன மையம் திறக்கப்படாமல் செல்ல முடியாது எனக் கூறிய பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிய காவல் துறையினர் யோகா மையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனாலும் பா.ஜ.கவினர் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.