May 13, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரோனா புதிய சிகிச்சை மையங்களை தமிழக அமைச்சர்கள் சக்கரபாணி – இராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவுபடி, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கொடிசியா மையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைய உள்ள ஆக்ஸிஜன் படுக்கையுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டனர். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டியின்போது கூறுகையில்;-
கொரோனா நோய் தொற்று கோவையில் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் அவர்கள், தன்னையும் வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரனையும் கோவைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தவர், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், கொரோனா நோயாளிகள் பயன்படுத்த கூடுதல் படுக்கைகள் கொடிசியா அரங்கில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இங்கு ஏற்கனவே 2 அரங்குகளில் 676 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூடுதலாக 3 அரங்குகளில் படுக்கை வசதிகள் என மேலும் 890 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு மட்டுமே சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் படுக்கை வசதிகளுடன் பல ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்;- குறிப்பாக கோவை மட்டுமின்றி, கோவையை சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சைகள் மேற்கொள்ள முதல்வரின் உத்திரவிற்கு இணங்க இந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக எங்கு அலைய வேண்டியதில்லை, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுத்துள்ளது என கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் நாகராஜ், டீன் ரவீந்திரன், மருத்துவ அதிகாரிகள், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.