June 24, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மற்றும் கேரளா மாநில எல்லைப்பகுதிகளில் மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்கள் வாங்கி வருவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணத்தினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.மேலும் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மதுப்பிரியர்கள் கோவை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கேரள மாநிலம் எல்லைப்பகுதிகளில் இருந்து மது வாங்கிக்கொண்டு வருகின்றனர்.
இதனை தடுக்க கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய ஒன்பது சோதனை சாவடிகளில் சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டிகல்களை எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பிரதான சோதனைச்சாவடிகள் மட்டும் அல்லாது, பல்வேறு வழிகளில் எல்லையினை கடக்கும் வழிகளையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இனைந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.