December 13, 2020
தண்டோரா குழு
அழுத்தம் காரணமாக பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் கோவை கூட்செட் சர்வீஸ் சாலையில் உருவான திடீர் பள்ளத்தை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு இடதுபுறம் உள்ள கூட்செட் சர்வீஸ் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, குழாயில் உடைப்பு ஏற்பட்டு திடீர் பள்ளம் உருவானது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் 60 mm தடிமன் கொண்ட பழைய பாதாள சாக்கடை குழாயை முழுவதுமாக அகற்றி விட்டு, சுமார் 40 மீட்டர் தூரத்துக்கு புதிய பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்படும் போது கூட் ஷெட் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ப்ரூக் பாண்ட் சாலை, கூட்செட் சாலை பகுதிகளில் உள்ள பழைய பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து அவ்வப்போது சாலையில் பள்ளம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.