December 13, 2021
தண்டோரா குழு
தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் நாளை முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து கடந்த அக்டோபார் மாதம் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியும் திறக்கப்பட்டது. இருப்பினும் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் அருவியில் குளிக்க வனத்துறையினர் காலவரையற்ற தடை விதித்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக மழை முற்றிலும் நின்றுள்ளதால், அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் பெய்யும் மழை நீர் சிற்றோடைகளாக மாறி, கோவை குற்றாலம் அருவியாக விழுகிறது. அடர் வனப்பகுதியில், ரம்மியமான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ள இந்த அருவியில் குளிக்க, கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.